• Breaking News

  August 12, 2011

  குழந்தைகள் படிப்பதற்காக பெற்றோர்கள் செய்ய வேண்டியவை…  தங்களின் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் பலரும் அதன்பொருட்டு தங்களின் குழைந்தைகளுக்கு உதவி செய்வதில்லை. சிலர் செய்ய நினைத்தாலும் வழிமுறை தெரிவதில்லை. அவர்களுக்காக இதோ சில யோசனைகள்...

  • வீட்டில் டி.வி. பயன்பாடு என்பது முக்கியமானதுதான். அதேநேரத்தில், படிக்கும் நேரம் என்று வந்துவிட்ட பிறகு அதை அணைத்துவிட வேண்டும். என்னதான் பிடித்த நிகழ்ச்சி என்றாலும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம்தான் முக்கியம்
  •  படிக்கும் நேரத்தில் வீட்டு தொலைபேசியை பயன்படுத்தும் அளவு குறித்து ஒவ்வொரு பெற்றோரும் முடிவு செய்ய வேண்டும். படிக்கும் நேரத்தில் நீண்ட நேரம் பேசுவதை தவிர்க்கலாம். அதேசமயம், ஏதேனும் முக்கிய பாட விஷயங்களைப் பற்றியோ, வீட்டுப்பாடம் பற்றியோ, சக வகுப்பு தோழர்களுடன் தொலைபேசியில், தங்களின் பிள்ளைகள் பேச வேண்டியிருந்தால், அதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
  • வீட்டில் போதுமான வசதி இருந்தால், உங்களின் குழந்தை படிப்பதற்கு ஒரு அறையை ஒதுக்கி தரவும். அந்த அறை அழகாக இருக்கிறதா என்பதை காட்டிலும், போதுமான வசதியுடன் இருக்கிறாதா? என்பதுதான் முக்கியம். மேலும், பாடகுறிப்புகளை முறையாக எழுதி வைத்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் எந்த குழப்பமும் வராது.  உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட பல பொருட்கள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • இரவு நேரத்தில், குடும்ப கலந்துரையாடல் மற்றும் இரவு உணவு முடிந்தவுடன் குழந்தைகள் படிக்க ஆரம்பிப்பது மற்றும் வீட்டுப்பாடம் செய்ய தொடங்குவதை பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும். சில நாட்களில், பிள்ளைகள் பள்ளியிலிருந்து விரைவிலேயே வீடு வந்துவிட்டால், உணவுக்கு முன்பே வீட்டுப் பாடத்தை முடிக்க உதவலாம்.
  • உங்களின் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வீட்டுப் பாடத்தை முடிக்க அல்லது ஒரு பாடத்தை படிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என்று கவனியுங்கள். அதற்கேற்ப அவர்களுக்கு, ஒவ்வொரு வேலையை முடித்த பிறகும், சிறிதுநேரம் இடைவெளி விடலாம். இடைவெளியை கண்காணித்து, சரியான நேரத்தில் அவர்கள் மீண்டும் படிப்பில் அமர்வதை பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும்.

  • தேர்வு சமயத்தில் பிள்ளைகளின் மீது பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில மாணவர்களுக்கு தேர்வு பயம் மிக அதிகமாக இருக்கும். மேலும், தேர்வுக்கு முதல் நாள் இரவு நெடுநேரம் கண்விழித்து சிலர் படிப்பார்கள். ஆனால் உங்கள் பிள்ளைகள் அதை செய்வதை தவிர்த்து விடுதல் நலம். இரவு தூக்கம் மிகவும் முக்கியம். அப்போதுதான் மறுநாள் தேர்வை சிறப்பாக கவனித்து எழுத முடியும்
  • கேள்வித் தாளை நன்கு தெளிவாக படித்து பதில் அளிக்குமாறும், தெரியாத கேள்விகளை முதலில் தவிர்த்துவிட்டு, தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதி, மீதி நேரம் இருந்தால் மீண்டும் அந்த விடுபட்ட கேள்விகளுக்கு வருமாறும், விடைத்தாளில் சரியான எண்களை கவனமாக எழுதுமாறும் அறிவுறுத்த வேண்டும்
  • உங்களின் குழந்தை எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறது என்பதை கவனித்து, அதைப்பற்றி உங்கள் குழந்தை என்ன சொல்கிறது என்பதை பரிவுடன் கேட்க வேண்டும். அந்த பாடத்தை முடிந்தால் நீங்களே நேரம் ஒதுக்கி சொல்லித்தரலாம் அல்லது டியூஷனுக்கு ஏற்பாடு செய்வதைப் பற்றி யோசிக்கலாம். இல்லையெனில், சம்பந்தப்பட்ட ஆசிரியருடன் இதுகுறித்து பேசலாம்.
  • எந்த குழந்தையையும் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றாலும், சாதுவான மற்றும் நார்மலான நிலையில் இருக்கும் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் படிப்பு விஷயத்தில் அடிப்பதை தவிர்க்க வேண்டும். சரியான முறையில் தீர்வு காண பெற்றோர் முயல வேண்டும்.

  பெற்றோர்களே இதை நாம் செய்தால்தான் நம் குழந்தைகள் படிப்பில் சிறந்தவர்களாக வருவார்கள்.

  இன்ன்னும் வளருவோம்..

  1 comment:

  1. அவசியமான பதிவு... வாழ்த்துக்கள்.!

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.